மருத்துவமனை சுவர்களுக்குள் நிகழும் மர்மங்கள் — குழந்தை உயிரிழப்பின் உண்மையான குற்றவாளி யார்?
ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது என்றால் அது அந்த குடும்பத்திற்கு புதிய கதிரவன் உதயமானது போல.
அந்த சிரிப்பு, அந்த மகிழ்ச்சி… நெகிழ்ச்சியான தருணம் அது.
ஆனால், திடீரென அந்த மகிழ்ச்சியின் இடத்தை கருப்பு மேகம் சூழ்ந்தால்?
இதற்கு நிறைய சான்றுகள் இருந்தாலும் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடந்த ஒரு சம்பவம் இன்று கூட மக்கள் மனதில் பதிந்திருக்கிறது.
மருத்துவர்கள் இல்லாமல், செவிலியர்கள் மட்டும் பிரசவத்தை கவனித்தனர்.
முடிவில் — 26 வயது அகிலா என்ற தாயும், வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.
அந்த நாளின் துயரம், அந்த மறக்க முடியாத கண்ணீர், இப்போது கூட பேசப்படுகிறது.
ஆனால் கேள்வி முக்கியம்…
இந்த மரணத்திற்கு காரணம் யார்?
மருத்துவர்களின் தவறா? அல்லது தாயின் உடல்நிலை பிரச்சனையா?
இது போன்ற சம்பவங்கள் இன்னும் எத்தனை நடந்துகொண்டிருக்கின்றன?
எதனால், குழந்தைகள் பிறக்கும் தருணத்தில் உயிரிழக்கின்றனர்?இதற்கான பதில் எளிதில் கிடைக்காது…ஆனால் தடயவியல் நிபுணர்கள் (Forensic Experts) இந்த மறைந்த உண்மையை வெளிக்கொணர, நுண்ணறிவோடு சில சோதனைகள் மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவருகின்றனர்.
குழந்தையின் வளர்ச்சி நிலை:
குழந்தை தாயின் வயிற்றில் சராசரியாக 280 முதல் 300 நாட்கள் (10 மாதங்கள்) இருக்கும். இந்த காலகட்டத்தில், தொப்புள்கொடி மூலமாக தாயின் இரத்தத்திலிருந்து தேவையான ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன், நீர் ஆகியவை குழந்தைக்கு வழங்கப்படும். குழந்தையின் நுரையீரல் வளர்ந்திருந்தாலும் அது செயல்படாத நிலையில் இருக்கும். பின்பு குழந்தை தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்தவுடன், வெளி காற்று நுரையீரலுக்குள் சென்று அதை செயல்படவைக்கிறது. இதனால் ஏற்படும் வலியின் காரணமாக குழந்தைகள் அழுகின்றன. இதை கொண்டே குழந்தை பிறந்துவிட்டது என்று பிரசவ அறைக்கு வெளியில் உள்ளவர்கள் தெரிந்துகொள்வார்கள். ஆனால் சில நேரங்களில் நமது எதிர்பார்ப்பிற்கு எதிராக நிகழ்வுகள் நடக்கின்றன. தாயின் உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் தவறான சிகிச்சை முறைகள் காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சூழ்நிலை உண்டாகிறது. ஆனால் இதற்கு பின்னால் உள்ள உண்மை என்னவென்று அறியாமல் மருத்துவ முறைகளினால் மட்டுமே குழந்தை இறந்துவிட்டது என்று கூறுவது சரியாகாது. அதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க, சில நுண்ணறிவு சோதனைகள் அவசியமாகின்றன. அதில் மிக முக்கியமான சோதனை நுரையீரல் மிதவை சோதனை (Lung Float Test).
நுரையீரல் மிதவை சோதனை (Lung Float Test):
நுரையீரல் மிதவை சோதனை என்பது இறந்த குழந்தையின் நுரையீரல்களில் காற்று இருந்ததா, குழந்தை சுவாசித்ததா என்பதை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் சோதனை முறையாகும். இது தண்ணீர் மிதவை சோதனை (Hydrostatic Test), டொசிமாசியா (Docimasia) அல்லது ரெய்கர் சோதனை (Rayger’s Test) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனையின் மூலம், குழந்தை கர்ப்பத்தில் இறந்ததா அல்லது பிறந்த பின் உயிரிழந்ததா என்பதை தீர்மானிக்க முடியும். வரலாற்றில், இந்த நுரையீரல் மிதவை சோதனை முதலில் 1670களில் ஹங்கேரிய தாவரவியல் அறிஞர் காரோலி ரெய்கர் (Károly Rayger) என்பவரால் விவரிக்கப்பட்டது. பிறகு, இது முதன்முதலில் 1681ஆம் ஆண்டு செய்யப்பட்டது. பின்னர், ஜெர்மன் மருத்துவர் ஜோஹான்ஸ் ஷ்ரேயர் (Johannes Schreyer) என்பவர் இந்த சோதனையை 1690ஆம் ஆண்டு விரிவாக செய்து காண்பித்தார்.
சோதனை நடைமுறை படிகள்:
இந்த சோதனையில், முதலில், தடயவியல் (Forensic) நிபுணர் முழுமையான உடற்கூறாய்வு (Postmortem) செய்து, நுரையீரலை முழுமையாகவோ அல்லது சிறு பகுதியோ எடுத்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் அல்லது பார்மலின் (formalin) ஊற்றி அதில் நுரையீரல் துண்டுகளை மெதுவாக வைக்கவும்.
குறிக்கோள்:
✔️ மிதக்கும் (Float) → நுரையீரலில் வாயு இருந்தால் குழந்தை சுவாசித்திருக்க வாய்ப்பு உண்டு எனவே குழந்தை பிறந்த பின்பு தான் இறந்துள்ளது.
✔️ மூழ்கும் (Sink) → சுவாசமில்லாத நிலை. நுரையீரல் தண்ணீரில் மூழ்கும். எனவே குழந்தை பிறக்கும் முன்பே கர்ப்பத்தில் இறந்ததாக கருதப்படுகிறது.
✔️ கால அளவு: குறைந்தது 5-10 நிமிடங்கள் நுரையீரலின் நிலையை கவனிக்கவும் (மிதக்கிறதா அல்லது மூழ்கியுள்ளதா என்று).
பொதுவாக குழந்தை இறந்து 24-48 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்த பரிந்துரை செய்யப்படுகிறது. இதற்கு பிறகு Decomposition (Putrefaction) எனப்படும் உடல் சிதைவு அதாவது உடல் உறுப்புகள் சிதைவு அடைந்து தவறான முடிவுகள் (False positive) அதிகரிக்கும்.
முக்கிய குறிப்புகள்:
- இந்த சோதனையை மட்டும் வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது.
- சில நேரங்களில் False positive மற்றும் False negative முடிவுகள் (அதாவது Putrefaction அல்லது Body handling) காரணமாக கூட வாயு உருவாகி நுரையீரல் மிதக்கும் நிலை உண்டாகலாம்.
- இதை சோதனைமுறையாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும், நம்பகமான ஆதாரமாக பயன்படுத்த வேண்டாம்.
- முழுமையான மருத்துவ மற்றும் தடயவியல் ஆதாரங்களை சேகரித்து மற்ற பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்.
மற்ற பரிசோதனை முறைகள்
நுரையீரல் மிதவை சோதனை தவிர வேறு சில பரிசோதனை முறைகள் குழந்தைகள் இறப்பை கண்டறிய உதவியாக உள்ளன:
- தாயின் உடல்நிலை, நோய் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால வரலாறு
- மரணத்தின் நிகழ்வுகளின் விவரம்
- சிகிச்சை முறைகளின் விவரம்
- Postmortem MRI அல்லது CT Scan
- ஆராய்ச்சி நோக்கில் பின்வரும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது:
- நுண்ணறிவு (Microscopic) ஆய்வுகள்
- மரபணு (Genetic) மற்றும் மெட்டபாலிக் (Metabolic) பரிசோதனைகள்
- நுண்ணுயிரியல் (Microbiological) பரிசோதனைகள்
முடிவுரை:
குழந்தை பிறப்பின் போது உயிரிழக்கும் நிகழ்வு என்பது தாயின் உடல்நிலை பிரச்சனை, தவறான சிகிச்சை முறைகள் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம். இதில் ஒரு தனிப்பட்ட மருத்துவமனையையோ அல்லது மருத்துவரையோ காரணம் கூறுவது சரியல்ல. எனவே குற்றம் கூறுவதற்கு முன்பு அனைத்து ஆதாரங்களை தீவிரமாக ஆராயவேண்டும்.
நுரையீரல் மிதவை சோதனை (Lung Float Test) (*இது மட்டும் நம்பகமான சோதனையாக கருதக்கூடாது) மற்றும் வேறு சில சோதனைகள் மூலம் குழந்தை இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து அதன்பின்பு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
Comments
Post a Comment